Skip to main content

கனடா பிரதமரின் கூற்றை மறுக்கும் இந்திய வெளியுறவுத்துறை!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய வருகையின் போது, அவர் கலந்துகொண்ட மும்பை நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வல் கலந்துகொண்டதாகவும், டெல்லி இரவு விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் உறுதியளித்திருந்தது. இந்நிலையில், கனடா திரும்பியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜஸ்பால் அத்வலின் இந்திய விசிட் குறித்த விசாரணை நடத்தப்படும் எனவும், அதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

Justin

 

இந்நிலையில், கனடா பிரதமரின் இந்திய விசிட் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார் பேசுகையில், ‘கனடா உயர் ஆணையரால் நடத்தப்பட்ட மும்பை விழாவில் ஜஸ்பால் கலந்துகொண்டது மற்றும் டெல்லி இரவு விருந்தில் கலந்துகொள்ள ஜஸ்பாலுக்கு அழைப்பிதல் அனுப்பப்பட்டது என எதிலும் இந்திய அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தொடர்பில்லை. இதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கூறும் எந்தக் கூற்றும் அடித்தளமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்’ என பேசியிருக்கிறார்.

 

ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய வருகையின்போது பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வரவேற்கவில்லை. இதற்கு காலிஸ்தான் அமைப்பினருடனான கனடா பிரதமரின் நெருக்கமே காரணம் எனக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து சோஃபி ட்ரூடோவுடன் ஜஸ்பால் அத்வல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியபோது, இதுதான் மோடி ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்திக்காமல் இருப்பதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்