
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் என்ற போர் விமானம் இன்று (02.04.2025) இரவு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இரு விமானிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதை பதைக்க வைக்கிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து எவ்வித முதற்கட்ட தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இந்த போர் விமான விபத்து குறித்து ஜாம்நகர் போலீஸ் எஸ்.பி. பிரேம் சுக் தேலு கூறுகையில், விமானப்படையின் (ஜாகுவார்) பயிற்சி விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொரு விமானியை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார். குஜராத்தில் போர் விமானம் விபத்துக்குள்ளானது சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜாம்நகர் மாவட்ட ஆட்சியர் கேதன் தக்கர் கூறுகையில், “ஜாம்நகர் மாவட்டத்தில் விமானப்படைக்குச் சொந்தமான ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. ஒரு விமானி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர் விமானத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மீட்புப் பணிக்காக விமானப்படை, தீயணைப்புக் குழு, காவல்துறை மற்றும் பிற குழுக்கள் இங்கு உள்ளன. இந்த விமான விபத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி பாதிக்கப்படவில்லை. அதாவது விமானம் திறந்தவெளியில் கீழே விழுந்து நொறுங்கியது” எனக் கூறியுள்ளார்.