
காணாமல் போன பத்திரிகையாளர் ஒருவர், எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசம், போர் பிளேயர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹ்தேப் டே (38). உள்ளூர் செய்தி தொலைக்காட்சியான ‘ரிபப்ளிக் அந்தமான்’ உரிமையாளரான இவர், காணாமல் போனதாக அவரது மனைவி கடந்த மார்ச் 29ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். வழக்கமாக 9 மணிக்குள் வீடு திரும்பும் ஷாஹ்தேப் டே, அடுத்த நாள் வரை வீடு திரும்பவில்லை என்றும், அவரது மொபைல் போன் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், வடக்கு அந்தமான் மாவட்டத்தில் எரிந்த நிலையில் ஒரு உடல் கிடப்பதாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ், அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், காணாமல் போனதாகக் கூறப்பட்ட பத்திரிகையாளரான ஷாஹ்தேப் டே தான் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார் என்பது தெரியவந்தது.
பத்திரிகையாளர் கொலை சம்பவத்தில் கங்கைய்யா, அவரது இரண்டு ஊழியர்கள் ராம சுப்பிரமணியன், ரமேஷ் மற்றும் உள்ளூர் பெண் பிடிகா மாலிக் ஆகிய 4 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தியது. அதில், பிடிகா மாலிக்கின் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 29ஆம் தேதி பத்திரிகையாள ஷாஹ்தேப் டேவை, பிடிகா மாலிக் திக்லிபூர் பகுதிக்கு சந்திக்க அழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த ஷாஹ்தேப் டேவை, கங்கைய்யா, ராம சுப்பிரமணியன் ரமேஷ் ஆகியோர் தாக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நான்கு பேரும், ஷாஹ்தேப் டேவின் உடலை ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. கொலை செய்ததற்கான முழுமை காரணத்தை பற்றி அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத மண் வெட்டுதல், மரக் கடத்தல், சட்டவிரோத மோசடி மற்றும் சூதாட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஷாஹ்தேப், கடந்த 3 ஆண்டுகளாக அந்த செய்தி தொலைக்காட்சியை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.