
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி (30.03.2025) இரவு உணவு சாப்பிட்டவர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் பேதி என திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலை சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி சோதனை நடத்துவதற்காக ஹோட்டலுக்கு சென்றனர். ஆனால் அந்த ஹோட்டல் மூடப்பட்டிருந்தது. இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு செல்போனில் அழைப்பு விடுத்தனர். ஆனால் அந்த அழைப்பை ஹோட்டல் உரிமையாளர்கள் ஏற்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ஹோட்டலை பூட்டி அதிகாரிகள் தற்காலிகமாகச் சீல் வைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த உணவகத்தில் சாப்பிட்ட விக்னேஷ், அவரது மனைவி நிவேதா மற்றும் விக்னேஷின் நண்பர் சிவக்குமார் ஆகிய மூவரும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டலில் உணவு சாப்பிட்ட சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.