
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை, இன்று (02-04-25) மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் மக்களவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பேசியதாவது, “மோசமான இந்து யார் என்பதை நிரூபிக்க தலைவர்கள் போட்டியிடுவதால் பா.ஜ.கவுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. நான் இதை அப்படியே சொல்லவில்லை. உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சியால், அதன் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை” என்று பா.ஜ.கவை கிண்டல் செய்து பேசினார்.
அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அகிலேஷ் யாதவ் புன்னகையுடன் ஏதோ ஒன்றை சொன்னார். அதற்கு நானும் புன்னகையுடன் பதிலளிக்கிறேன். அங்குள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் குடும்பத்தின் 5 பேரில் இருந்து தங்கள் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பீர்கள். ஆனால், நாங்கள் ஒரு செயல்முறையைப் பின்பற்றி 12-13 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்போம். எனவே இதற்கு நேரம் எடுக்கும். ஆனால், உங்களை பொறுத்தவரை அவ்வளவு நேரம் எடுக்காது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீங்கள் தான் தலைவராக நீடிப்பீர்” என்று சிரித்தபடியே அகிலேஷ் யாதவுக்கு பதிலளித்தார்.