
மாமியாருடன் ஏற்பட்ட தகராறில், தனது 6 வயது மகள் உள்பட மூன்று பேரை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகர் கவுடா (40). இவருக்கு 8 வருடங்களுக்குப் பிறகு சுவாதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில், கொஞ்ச கொஞ்சமாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சுவாதி மங்களூருவில் வேலை பார்த்து வந்தார். ரத்னகர் கவுடா சொந்த பகுதியிலேயே பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், பிரிந்து சென்ற மனைவி வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக தனது மாமியார் வீட்டிற்கு ரத்னகர் கவுடா சம்பவ நாளன்று சென்றுள்ளார். அப்போது, சுவாதி வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ரத்னகருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரத்னகர், மாமியார் ஜோதி (50), மனைவியின் சகோதரி சிந்து (20), மற்றும் 6 வயது மகள் மெளல்யா ஆகிய மூன்று பேரையும் கொடூரமாகக் கொலை செய்தார்.
இதனையடுத்து, மனைவியின் சகோதரனையும் தாக்கிவிட்டு ரத்னகர் கவுடா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், உடனடியாக அங்கு வந்து ரத்னகரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.