டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தங்களது வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் அறிவித்து வருகிறது.
அதே நேரத்தில், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. அதனால் அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என ஆகிய கட்சிகளுடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிடமும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்த இந்தியா கூட்டணி உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்கள் ஆதரவுடன் வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் தலைமையாக இருக்கும் காங்கிரஸுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காததால், அக்கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா கூட்டணியைத் தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதிலும், மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, சரத் பவாரின் சரத்சந்திர பவார் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.