திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த முல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் பாணி பூரி வியாபாரம் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள ஒரு ஊராட்சி கடையை ஏலம் விட்டபோது அந்த கடையை திருப்பதி ஏலம் எடுத்துள்ளார். இதில் இவர் கடையை கூடுதல் வாடகைக்கு ஏலம் எடுத்ததாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பதி தன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வழியில் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியுள்ளது.
அப்போது 8 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று திருப்பதியை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த திருப்பதியை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட திருப்பதி கூறிய போது, ஊராட்சி கடையை நான் கூடுதல் வாடகைக்கு ஏலம் எடுத்ததால் தன்னை அரசியல் கட்சி பிரமுகர் ரமேஷ் மற்றும் 3 பெண்கள் உட்பட 8 பேர் சேர்ந்து தன்னை சரமாரியாக தாக்கியதாகவும், இது குறித்து ஆலங்கயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் பாதிக்கப்பட்ட தன் மீது வழக்குப் போடுவதாக கூறி தன்னை தாக்கியவர்களுக்கு போலிசார் ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.