காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, விசிக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்றது. இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணியைத் தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதிலும், மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, சரத் பவாரின் சரத்சந்திர பவார் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. தற்போது வரை இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு, புதிய தலைமையை ஏற்க மம்தா பானர்ஜிக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனிடையே, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. அதனால் அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என ஆகிய கட்சிகளுடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
அதே வேளையில், பீகார் மாநிலத்திலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் வரும் அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, “மக்களவைத் தேர்தலுக்காகவும், பா.ஜ.கவின் வெற்றி பயணத்தை தடுக்கவும் தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அதற்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை. காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான மோதல் எதிர்பாராதது அல்ல” என்று கூறினார்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் என ஜம்மு காஷ்மீர் முதல்வரும், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “டெல்லி தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் இதைப் பற்றி எதுவும் கூற முடியாது. பா.ஜ.கவை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் களத்தில் உள்ள மற்ற கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு நினைவிருக்கும் வரை, இந்தியா கூட்டணிக்கு கால அவகாசம் இல்லை. இந்தியா கூட்டணியின் கூட்டம் எதுவும் நடைபெறாதது வருத்தமளிக்கிறது. யார் வழிநடத்துவார்கள்? நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்கும்? கூட்டணி எப்படி முன்னேறும்? இந்த விவகாரங்களில் எந்த விவாதமும் இல்லை. ஒற்றுமையாக இருப்போமா இல்லையா என்பதில் தெளிவு இல்லை. டெல்லி தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கூட்டத்தை நடத்தி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு வேளை நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டும் தான் கூட்டணி அமைக்கப்பட்டது என்றால், அவர்கள் கூட்டணியை நிறுத்த வேண்டும். ஆனால், சட்டசபை தேர்தலுக்கும் இது தொடர வேண்டுமானால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.