உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பலவீனமான பாஸ்போர்டுகள் குறித்து தரவரிசையை ஹென்ஸி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அந்த தரவரிசையை, சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அதில், விசா இல்லாமல், பாஸ்போர்ட் மூலம் மட்டுமே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் ‘சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்’ என்று கருதப்படுகிறது. இந்த பட்டியல், உலகின் 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை 227 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகை அடிப்படையில் தரவரிசைப்படுத்தப் படுகிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்டுகள் குறித்த தரவரிசையை ஹென்ஸி பாஸ்போர்ட் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை பட்டியலில், 195 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில், 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா, பின்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்கா 9வது இடத்திலும், சீனா 60வது இடத்திலும், இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கடந்தாண்டு 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்லும் சலுகையுடன் 80வது இடத்தை பிடித்திருந்த இந்தியா, இந்தாண்டு 85வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு 101வது இடத்தை பிடித்திருந்த நமது அண்டை நாடான பாகிஸ்தான், இந்தாண்டு 103வது இடத்தை பிடித்துள்ளது. வங்கதேசம் 100வது இடத்தை பிடித்துள்ளது.