முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மதியம் உயிரிழந்தார். இதனையடுத்து அருண் ஜெட்லியின் உடல் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அருண் ஜெட்லியின் உடல் இன்று காலை 10.00 மணியளவில் தீன்தயாள் உபாத்யாய் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜகவின் மூத்த தலைவர்கள், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.
டெல்லி யமுனை நதிக்கரை அருகே உள்ள நிகம்போத் கட்டில் உள்ள தகன மேடையில் இறுதி சடங்கு நடைபெற்றது. முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அருண் ஜெட்லியின் பூத உடலுக்கு, அவரின் மகன் எறிவூட்டினார்.
இந்த இறுதி சடங்கு நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமிதாஷா, ராம்விலாஸ் பாஸ்வான், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், பல்வேறு கட்சித்தலைவர்களும் பங்கேற்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர். அப்போது துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார். டெல்லியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பல்வேறு தரப்பினரும் அருண் ஜெட்லிக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.