கேரளாவில் பிணராய் விஜயன் தலைமையிலான மா. கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வருகிறது. இன்னும் 7 மாதத்தில் தோ்தலைச் சந்திக்க இருக்கும் கேரளாவில், ஆளும் கட்சியும், எதிா்க் கட்சிகளும் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா் கூட்டங்களைக் கிளைகள் வாாியாக நடத்தி வருகின்றனா். அந்த வகையில் கட்சி கூட்டத்துக்குச் சென்ற மா. கம்யூனிஸ்ட் பெண் உறுப்பினா் கட்சி அலுவலகத்துக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் பாறசாலை அழகிகோணத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீகுமாா். இவருடைய மனைவி ஆஷா, மா. கம்யூனிஸ்ட் கட்சியில் 15 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தாா். மேலும் பாறசாலை ஏாியா கமிட்டியில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை பாறசாலை கட்சி அலுவலகத்தில் நடந்த கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆஷா இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய கணவா் கட்சி அலுவலகம் வந்து விசாாித்து விட்டு உறவினா்கள் வீடுகளிலும் சென்று விசாாித்தாா்.
ஆஷாவை எங்கும் காணாததால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை கட்சி நிா்வாகிகளோடு உறவினா்களும் தேடி வந்தனா். இந்த நிலையில் பாறசாலையில் திறக்கப்படாமல் இருந்த புதிய கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக ஆஷா இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
அவருக்கு அருகில் கிடந்த கடிதத்தில், "கட்சியின் கிளைச் செயலாளா் அஸ்தன் ஜாய் மற்றும் கட்டமண்ராஜன் இருவரும் தொடா்ந்து தனக்கு டாா்ச்சா் தந்ததாலும், மேலும் இரட்டை அா்த்தத்தில் அருவறுப்பான வாா்த்தைகளால் பேசி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தனா். இது சம்மந்தமாக கட்சி மேல்மட்ட தலைவா்களுக்கு புகாா் அனுப்பியும் அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மேலும் இன்று நடந்த கட்சி கூட்டத்திலும் என்னை தவறாக பேசியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என எழுதியிருந்தார். இது கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆஷாவின் உடலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இந்தச் சம்பவம் முதல்வா் பிணராய் விஜயனின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பாறசாலை சப்- இன்ஸ்பெக்டா் ரதீஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். மேலும் எதிா்க்கட்சி தலைவா் காங்கிரஸ் ரமேஷ் சென்னிதல, கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல சம்பவங்கள் உணா்த்தியுள்ளது. இதில் தொடா்புடைய கம்யூனிஸ்ட் காரா்களை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் நோ்மையான ஒரு டி.ஜி.பியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.