![rj balaji Sorgavaasal trailer released](http://image.nakkheeran.in/cdn/farfuture/dEbwt13rBsV8bM-uACcFfm04QeHxTAhWhDyIU17utFY/1732347486/sites/default/files/inline-images/22_127.jpg)
ஆர்.ஜே பாலாஜி கடைசியாக ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்திருந்தார். இந்தாண்டு தொடக்கத்தில் ஜனவரியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் சொர்க்கவாசல். நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த இவர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஆர்.ஜே பாலாஜி இந்தப் படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் பட வெளியீட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், ஒரு சிறைக்குள் கைதியாக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி அதிலிருந்து தப்பிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கிற போது, அதை அவர் எவ்வாறு பயன்படுத்தினார். இறுதியில் அவர் தப்பித்தாரா இல்லையா என்பதை அழுத்தமான காட்சிகளுடன் சிறை வாழ்க்கையை விரிவாக சொல்லியிருப்பது போல் உள்ளது. இந்த ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ட்ரைலரில் ‘நரகத்துல இருக்குற எல்லார்கிட்டையும் சொர்க்கத்துக்கு ஒரு சாவி இருக்குன்னு சொன்னா, அவுங்க அதை கண்டுபிடிகாமயா இருப்பாங்க. ஏன்னா அவங்களுக்கு சொர்க்கத்துக்கு போகனுங்கிற ஆசை இல்ல. அந்த நரகத்துல இருந்து தப்பிக்கனுங்கிற வெறி...’ என்று தொடங்கும் ஆர்.ஜே பாலாஜியின் வாய்ஸ் ஓவர் மற்றும் ஒரு காட்சியில் ‘யார் போலீஸ், யார் அக்யூஸ்ட்டுனே தெரில’ என்று குழப்பத்தில் ஆர்.ஜே பாலாஜி பேசும் வசனம் போன்றவை ஹைலட்ஸாக அமைந்துள்ளது.