ஆறுமுக நாவலர் இலங்கை யாழ்பானம் நல்லூர் என்கிற ஊரில் கந்தப்பிள்ளை சிவகாமி அம்மையாருக்கு கடந்த 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆறுமுகம். இவர் சிறு வயதிலேயே தமிழ் மீது ஆர்வம் கொண்டவர். இவர் 12 ஆம் வயதில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ந்து புலமை பெற்றுள்ளார். இலங்கை யாழ்பாணத்தில் இவர் படித்த ஆங்கில பள்ளி தான் பிற்காலத்தில் யாழ்பானம் மத்திய கல்லூரியாக மாறியது. இந்தப் பள்ளியில் தமிழ் மொழிபெயர்ப்புக்கு முற்றிலும் ஆறுமுக நாவலர் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். பின்னர் அந்த மொழிபெயர்ப்புகளை அச்சில் கோர்க்க இந்தியா வந்துள்ளார்.
ஆறுமுக நாவலர் தமிழ் மொழியின்பால் கொண்ட ஈடுபட்டால் தமிழினை பிழையில்லா கற்று அதனை அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்ற பேராவலால் நன்கு கற்றுக்கொண்டுள்ளார். இவர் அப்போதிருந்த கடினமான தமிழை எளிமைப்படுத்தி வசனம் நடையிலேயே எழுதுவதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். எனவே தான் ஆறுமுக நாவலரை வசன நடை கைவந்த வள்ளலார் என்று அழைத்துள்ளனர்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியம் பூண்டு சைவம் தமிழும் எனது இரு கண்கள் இவை ஒளி குன்றாமல் காப்பது என் கடமை என்று பேசி அதனை செயல்படுத்தியும் வந்துள்ளார். 1858 ல் சென்னையில் அச்சுஇயந்திர கூடம் நிறுவுதற்கும் சில தமிழ் நூல்களை வெளியீடுவதற்கு சென்னை வந்துள்ளார். தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டுள்ளார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டு ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றுள்ளார்.
1864-ல் இவர் சிதம்பரத்தில் சைவ பிரகாச வித்யா சாலையை நிறுவ வேண்டும் என சிதம்பரத்திற்கு வந்து தங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் சிதம்பரம் மேல வீதியில் சைவ பிரகாச வித்யாசாலையை துவக்கியுள்ளார். பின்னர் 1949 இல் தொடக்கப் பள்ளியாகவும் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. 1953இல் அரசு உயர்நிலைப் பள்ளியாக இது தரம் உயர்த்தப்பட்டது. பின்பு 1981இல் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியாக கல்வி உயர்த்தப்பட்டது. தற்போது 750 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சாமிநாதன் குடும்பத்தினரால் புதிய முதல் தல படிக்கட்டு மற்றும் 3 வகுப்பறைகள் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு 100 மாணவர்கள் கல்விப் பயிலும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருவழி கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவ மாணவிகள் விளையாட்டுத் திறன், கலைத்திறன், ஓவியம் உள்ளிட்ட தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து கலைத்திறனும் வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு கல்வி கற்கப்படுகிறது.
1879 ஆம் ஆண்டு ஆறுமுக நாவலர் காலமானார். அவரது நினைவு நாளை குருபூஜை தினமாக பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யாழ்பானத்தில் பிறந்து கல்வியை வளர்க்கும் வண்ணம் தமிழகத்தில் சிதம்பரத்தில் நிறுவிய ஆறுமுக நாவலர் சைவ பிரகாச வித்யாசாலை 160 ஆண்டுகளைக் கடந்து இன்றும் அவரது தமிழ் பணி. கல்விப் பணியினை பறைசாற்றுகிறது அவரது 145-ஆவது குருபூஜை தினம்.