தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றிவர் போலீஸ் ஐ.ஜி. முருகன். இவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை பெருநகர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு கடந்த 22ஆம் தேதி (22.11.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆஜராகவில்லை. இதனால் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு நீதிபதி சுல்தான் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. முருகன், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று (25.11.2024) ஆஜரானார். இதனையடுத்து ஓய்வுபெற்ற ஐஜி முருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து நீதிபதி சுல்தான் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.