நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (25.11.2024) காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுவதற்கான தேதியை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (25.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “சட்டப்பேரவை வீதி 26/1 கீழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி காலை 09.30 மணிக்குத் தொடங்க உள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் கூட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவெடுக்கும். சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து படிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது ” எனத் தெரிவித்தார்.