Skip to main content

தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்கள்; “தமிழில் தான் பேசணும்” - அல்லு அர்ஜூன் அதிரடி

Published on 25/11/2024 | Edited on 25/11/2024
allu arjun speech at pushpa 2 event in chennai

புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் தாணு ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஸ்ரீலீலா நடனமாடிய ‘கிஸ்ஸிக்’ பாடல் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய அல்லு அர்ஜூன் தமிழில் பேசத் தொடங்கினார். அவர் பேசியதாவது, “நான் பிறந்த என் மண்ணுக்கு எனது அன்பு வணக்கம். சென்னை மக்களே, இந்த நாள் மறக்கமுடியாத நாள். எத்தனையோ வருஷம் இதுக்காக காத்திருந்தேன். ஏனென்றால், கிட்டதட்ட 20 வருஷம் சினிமவில் இருக்கேன், புஷ்பா படத்தை புரொமோஷன் பண்ண வெளிநாடு, வெளிமாநிலம் போனேன். ஆனால் சென்னைக்கு வரும்போது அந்த உணர்வே வேற. சென்னையில் தான் நான் வளர்ந்தேன். அங்கிருந்துதான் எல்லாத்தையும் ஆரம்பித்தேன். அதனால் சென்னையோடு எமோஷ்னல் கனெக்ட் எப்போதுமே இருக்கும்.  

என்னுடைய வாழ்க்கையில் முதல் 20 வருஷம் சென்னையில்தான் இருந்தேன். அதனால் நான் வாழ்க்கையில் என்ன சாதித்தாலும் என்னுடைய அடித்தளமாகிய சென்னைக்கு நன்றி சொல்வேன். நான் ஒரு டி.நகர் சென்னை பையன். மேடையில் பேசும்போது அப்பப்போ தமிழ் மறந்துவிடுவேன். ஆனால் நண்பர்களுடன் பேசும்போது ஏய், என்னா மச்சான் இவன்... ரொம்ப ஓவரா பன்றான்னு சரளமா பேசுவேன். நான் நேஷ்னல் போலாம், இன்டர்நேஷ்னல் போலாம், எங்க வேணாலும் போலாம். எங்க போனாலும் ஒரு சென்னை பையன் போனான்னு நீங்க சொல்லிக்கலாம். புஷ்பா படத்துக்காக மூன்று வருஷம் உழைச்சிருக்கேன். டிசம்பர் 5 நெருப்பு மாதிரி ஒரு படம் பாக்கப் போறீங்க. நிறைய தடவை சென்னைக்கு வந்திருக்கேன். நிகழ்ச்சியில் பேசியிருக்கேன். ஆனால் என்னுடைய படத்துக்காக பேச வேண்டும் என எண்ணம் இருந்து கொண்டே வந்தது. என் ஊர்ல எனக்கு ஒரு ஃபங்ஷன் வேணும். அது என்னுடைய லைஃப்ல ஒரு அடையாளம்” என்றார். 

அப்போது ரசிகர்கள் தெலுங்கில் பேச சொல்லி அல்லு அர்ஜூனிடம் கூறினர். அதற்கு பதிலளித்த அல்லு அர்ஜூன், “இந்த இடத்தில் தமிழ்ல தான் பேசனும். ஏன்னா, அது இந்த மண்ணுக்கு நாம கொடுக்குற மரியாதை. எந்த மண்ணுல நாம் நிக்கிறமோ, முடிஞ்ச வரை அந்த மண்ணு மொழியில பேசனும். துபாய் போனா அரபிக்கில் பேசுவேன். இந்திக்கு போனால் இந்தியில் பேசுவேன். அதே போல் தெலுங்கு மலையாளம் போனால் அந்தந்த மொழியில் பேசுவேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்