சென்னை கண்ணகி நகரில் 'விழுதுகள்' சேவை மையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (25.11.2024) திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் தொடர்பான மறுவாழ்வு சேவைகள் வழங்கும் மையம் ஆகும். இது ரூ. 3.08 கோடியில் விழுதுகள் சேவை மையம் சீரமைக்கப்பட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திமுக எம்.பி.க்கள் எழுப்ப உள்ள கேள்விகள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஏற்கனவே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக எம்.பி.க்கள் என்னென்ன பேச வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். அதனை வலியுறுத்திப் பேச வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்” எனத் தெரிவித்தார். அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வரைச் சந்தித்ததாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, “இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதற்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.” எனப் பதிலளித்தார்.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?. அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.