மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலோடு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள் கடேஹரி, கர்ஹால், மிராபூர், காசியாபாத், மஜவான், சிசாமாவ், கைர், புல்பூர் மற்றும் குந்தர்கி ஆகிய தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் பதிவாகும் வாக்குகள், கடந்த 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜ.க 6 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் தளம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் மிக சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்று பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் எந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மாயாவதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உத்தரப்பிரதேசத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பதிவான வாக்குகள் மற்றும் அறிவிக்கப்பட்ட முடிவுகள் குறித்து பரவலாக விவாதிக்கப்படுகிறது. இதை நானே சொல்லவில்லை; முன்னதாக, வாக்குச் சீட்டு மூலம் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது, முறைகேடாகப் பயன்படுத்தி, பெரும்பாலும் மோசடி மூலம் போலி வாக்குகள் போடப்பட்டன என்பது மக்கள் மத்தியில் பொதுவான கருத்து உள்ளது. இப்போது, இதேபோன்ற நடைமுறைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. இது ஆழ்ந்த ஜனநாயகத்திற்கு கவலையும் வருத்தமும் அளிக்கிறது.
இதை சமீபத்தில் உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பார்த்தோம். மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தல்களிலும் இதே போன்ற கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இது நம் நாட்டில் ஜனநாயகத்திற்கு ஒரு முக்கிய எச்சரிக்கை மணி. போலி வாக்குப்பதிவை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை, நாடு முழுவதும், குறிப்பாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. நான் இங்கு இடைத்தேர்தலை குறிப்பாக குறிப்பிடுகிறேன்” என்று தெரிவித்தார்.