குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 ஆமைகள் கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீர் தொட்டிக்குள்ளேயே அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தின் மஹமயா சவுக் பகுதியில் 6 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மூன்று ஆமைகளை வைத்து சட்டத்திற்கு புறம்பாக மாந்த்ரீக காரியங்களில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். அந்த 6 பேரையும் கைது செய்த போலீஸ், அவர்களிடம் இருந்த ஆமைகளை கைப்பற்றினர். பின்னர் மீட்கப்பட்ட ஆமைகளை வனத்துறையினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் வனத்துறையினர் இன்னும் அந்த ஆமைகளை ஒரு தொட்டிக்குள் போட்டு அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, "நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி முடிவு கிடைத்த பின்னரே முடிவு எடுக்க முடியும். ஆமைகள் 4 ஆண்டுகளாக நீர் தொட்டிக்குள் பராமரிக்கப்படுகிறது" என கூறியுள்ளார்.
குளம், குட்டைகளில் வாழவேண்டிய ஆமையை இப்படி 4 ஆண்டுகளாக தொட்டிக்குள் போட்டு அடைத்து வைத்திருக்கும் சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.