இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள்(10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவை கூடிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ.பிரையன் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவை கூடிய உடனே நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து எப்போது விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகள் கேட்க, பாஜகவினர் மணிப்பூர் விவகாரம் குறித்து விதி என் 267 கீழ் விவாதம் நடத்த வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர். உடனடியாக எம்.பி டெரிக் ஓ.பிரையன் தனது இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாகப் பேசினார். இதுபோன்று பல முறை தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து ஆவேசமாக டெரிக் ஓ.பிரையன் பேசியிருந்ததாகவும், அவரைப் பலமுறை அவைத்தலைவர் தன்கர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் அவ்வாறு நடந்துகொண்டதால் டெரிக் ஓ.பிரையனை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஆம் ஆத்மி எம்.பி சஞ்ஜை சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.