Skip to main content

‘நான் சாகாவிட்டால், என் அம்மாவைக் கொன்றுவிடுவார்கள்!’- ப்ளூவேல் படுத்தும் பாடு

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
‘நான் சாகாவிட்டால், என் அம்மாவைக் கொன்றுவிடுவார்கள்!’- ப்ளூவேல் படுத்தும் பாடு

ப்ளூவேல் விளையாட்டில் கலந்துகொண்டு தற்கொலை செய்துகொள்வதற்காக, ஆற்றில் குதித்த 17 வயது சிறுமியை மீட்புப்படை வீரருடன் காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.



ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தொடர்ந்து ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இவர் எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் மகளாவார். நேற்றிரவு மார்க்கெட் பகுதிக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு கிளம்பிய இவர், நீண்ட நேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் பெற்றோர்கள் சந்தேகமடைந்துள்ளனர். அந்த சிறுமியின் செல்போனுக்கு அழைத்தால், வேறு யாரோ அழைப்பை ஏற்று பேசியதை அடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையை நாடியுள்ளனர்.

இரவு 11 மணியளவில் ஜோத்பூரில் உள்ள ஒரு ஆற்றின் கரையோரத்தில் இந்த சிறுமி அலைந்துகொண்டிருப்பதை சிலர் பார்த்ததாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர், அங்கு சென்றபோது அந்த சிறுமி ஆற்றில் குதிப்பதைக் கண்ட அதிகாரி ஒருவர், மீட்புப் படைவீரரின் உதவியோடு சிறுமியை மீட்டுள்ளார். 

மீட்கப்பட்ட சிறுமி, ‘நான் இப்போது சாகாவிட்டால், என் தாயாரை கொன்றுவிடுவார்கள்’ என மீண்டும் தண்ணீருக்குள் குதிக்க முயன்றுள்ளார். மேலும், அவர் தன் கையில் கூர்மையான பொருளால் கிழித்து நீலத்திமிங்கலத்தை வரைந்திருந்தது பின்னர் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இளைஞர்களை தற்கொலைக்கு தள்ளும் இந்த விளையாட்டை, தடை செய்யுமாறு அரசை நோக்கி பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பதே இதிலிருந்து காத்துக்கொள்வதற்கான உண்மையான தீர்வாக இருக்கும்.

- ச.ப.மதிவாணன் 

சார்ந்த செய்திகள்