Skip to main content

“மகள்களைச் சந்தித்தேன்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Published on 21/01/2025 | Edited on 21/01/2025

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, முடியரசன் சாலையில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (21.01.2025) மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்விடுதியில் 62 பள்ளி மாணவிகள் தங்கியுள்ளனர்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அம்மாணவிகளிடம் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், அம்மாணவிகளை நன்றாக படித்து, வாழ்வில் சிறப்பான நிலையினை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, விடுதியில் உள்ள சமையல் கூடம், உணவுக் கூடம், இருப்பு அறை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளுக்கு இரவு உணவாக வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றை ருசித்து பார்த்து அதன் தரத்தினை ஆய்வு செய்தார். அதன் பின்னர், விடுதி அலுவலர்களிடம், மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவினை குறித்த நேரத்தில் தவறாமல் வழங்கிட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், மாலை நேரங்களில் மாணவிகளுக்கு விடுதி காப்பாளர்கள் பாடங்கள் கற்றுத் தருவது பாராட்டுக்குரியது என்றும், பள்ளி பாடத்துடன் பொது அறிவு தகவல்களையும் மாணவிகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் பெரியகருப்பன், கோவி. செழியன், மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் காணொளியுடன் வெளியிட்டுள்ள பதிவில், “காரைக்குடி அரசு ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் மகள்களைச் சந்தித்தேன்.... பேரன்பு” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்