மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது இந்த ரயிலில் தீப்பிடித்ததாகச் சந்தேகப்பட்ட பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தங்கள் ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறிய பயணிகள் மற்றொரு தண்டவாளத்தில் குதித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்த பயணிகள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 10 பயணிகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புஷ்பக் ரயில் விபத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவச் சிகிச்சை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.