பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியீடு நடந்தது. இதில் அமீர், வெற்றிமாறன், மிஸ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இதில் மிஸ்கின் பேசிய சில விஷயங்கள் அந்த நிகழ்வில் சலசலப்பு ஏற்படுத்தியது. பின்பு அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழுந்தது.
இப்படம் வருகிற ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மதுவிற்கு அடிமையான ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இதில் மிஸ்கின், மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன், சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பின்பு படம் குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
அந்த வகையில் மாரி செல்வராஜ், “சின்னதாக ஆரம்பிக்கக்கூடிய சில பழக்கவழக்கங்கள் நம் குடும்பத்தையும் சமூகத்தையும் பாழாக்குகிறது என்பதை சொல்லக் கூடிய படம். இது படமா இல்லை பக்கத்து வீட்டில் நடக்கும் வாழ்க்கையா என யோசிக்கிற அளவிற்கு நேர்த்தியாக எடுக்கப் பட்டுள்ளது. இந்தப் படம் சமூகத்துக்கு மிகவும் அவசியமான படம். குரு சோமசுந்தரம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தக் கதை யாருக்குமே அந்நியப்பட்டது கிடையாது. நிச்சயம் இந்த படம் முக்கிய படமாக இருக்கும்” என பாரட்டினார்.