இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் டி20 தொடர் இன்று (22.01.2025) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சூர்யாகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி 3விக்கெட்களையும், அர்ஷ்தீப், ஹர்திக் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த எளிய இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது. அதாவது 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில், 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களையும், அடில் ரஷித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி சார்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி இங்கிலாந்து - இந்தியா மோதும் 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.