அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. -வுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், பல்வேறு மாநிலங்களிலும், அரசியல் தலைவர்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தமிழகம், டெல்லி போன்ற பல மாநிலங்களில் அமைச்சர்கள் மாற்று எம்.எல்.ஏ க்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஆளும்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ. மதுரா மஹதோ மற்றும் அமைச்சராக உள்ள மித்லேஷ் தாகுர் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இவர்கள் இருவருடனும் தொடர்பிலிருந்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.