காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 40 துணை ராணுவ வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படையின் பதிலடி, அதன்பிறகான எல்லை ஊடுருவல்கள், விமானி அபிநந்தன் விடுவிப்பு என பரபரப்பான சூழல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி ஒருவர், நிலவிவந்த போர்ப் பதற்றத்தை விமர்சிக்கும் விதமாக போர் வேண்டாம் #SayNoToWar என தனது சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருந்தார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து விமர்சித்தது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய துணை ராணுவப் படையில் இருந்தவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பப்லு சாண்ட்ரா. புல்வாமா தாக்குதலின்போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களில் இவரும் ஒருவர். இவரது மனைவி மிட்டா சாண்ட்ரா தனது கணவரை இழந்துவாடும் நிலையில், போர் வேண்டாம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், மிட்டாவை கோழை என்றும் சுயநலவாதி என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இன்னொரு புறம், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் மிட்டாவின் கருத்தை ஆதரித்து, அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். இதுபற்றி மேலும் பதிவிட்டுள்ள மிட்டா, “போர் என்றால் எண்ணற்ற ராணுவ வீரர்களின் உயிரைக் குடித்துவிடும். அவர்களது குடும்பங்கள் நிர்கதியாகி விடும். போர் எப்போதும் நிரந்தரத் தீர்வைத் தந்துவிடப் போவதில்லை. மனைவி கணவனையும், தாய் மகனையும், மகள் தந்தையையும் இழக்கும் கொடுமை நடக்க வேண்டுமா இனியேனும்? போரினால் பொருளாதாரமும், சமூக மேம்பாடும் மிக மோசமான சேதத்தைச் சந்தித்த வேண்டி இருக்கும். ஒட்டுமொத்த நாடும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தீவிரவாதம் குறித்துப் பேசியுள்ள மிட்டா, “தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. தீவிரவாதம் தேசத்தையும், சமூகத்தையும் ஒழிக்க நினைக்கும் மிகப்பெரிய எதிரி. என் கணவரையே அதன் கோரப்பற்களுக்கு இரையாகக் கொடுத்துவிட்டுத் தவிக்கிறேன். இனியும் ஒரு போர் அவசியமா? என்னைப் போல மற்றவர்களும் தவிக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்புகிறார்.