Skip to main content

மோதிக்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்... சமாதானம் செய்த ராகுல் காந்தி...

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

heated argument between ashok gehlot and anand sharma

 

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், அதனை ராகுல் காந்தி சமாதானப்படுத்தி வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நேற்று (22.01.2021) நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் விவசாயச் சட்டங்கள் உள்ளிட்ட பாஜகவின் ஆட்சி, பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டதாகவும், பின்னர் ராகுல் காந்தி அதில் தலையிட்டுச் சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

தலைவர் பதவி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் மறைமுகமாகச் சாடிய அசோக் கெலாட், "கடந்த 10 ஆண்டுகளாகக் காரியக் கமிட்டிக் கூட்டம் எந்தவிதத் தேர்தலும், சண்டையும் இல்லாமல் நடந்தது. ஆனால், திடீரென தேர்தல் நடத்தக் கோரி ஒருதரப்பினர் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் சொந்தத் தலைமை மீதே குறை சொல்வதையும், விமர்சிப்பதையும் தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள பிரச்சனைகளைத் தலைமையிடம் விட்டுவிட்டு, உறுப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டும். சில தலைவர்கள் அடிமட்டத்திலிருந்து வளராமல் நேரடியாகப் பெரிய பதவிக்கு வருவதற்குத் தேர்தலில் போட்டியின்றி வருவதற்கு முயல்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

அப்போது அவரது கருத்துக்குப் பதிலடி தரும் வகையில், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா பேசியுள்ளார். இருவருக்கும் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், இதில் தலையிட்ட ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதை நோக்கி நகர்வோம். இப்போது நாம் மக்களின் பிரச்சனைகள், விவசாயிகள் போராட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறி இருவருக்குமிடையே சமாதானம் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்