ஜிஎஸ்டி வரி (GST TAX) செலுத்துவதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி மேம்படுத்தபட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் வரி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி செலுத்துவது குறித்த தகவல்களை வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில், எஸ்.எம்.எஸ் வசதி (SMS FACILITIES) செய்யப்பட்டுள்ளது. எந்த தேதிக்குள் ஜிஎஸ்டி வரி செலுத்துவது, ரிட்டன் தாக்கல் செய்வது உள்ளிட்டவை குறித்து, மூன்று நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியை ஜிஎஸ்டி தொழில்நுட்ப பிரிவு மேற்கொண்டு வருகிறது.
முன்கூட்டியே எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகள், வரி ஏய்ப்பு உள்ளிட்டவை தவிர்க்கப்படும் என ஜிஎஸ்டி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவை அடுத்து, இதனை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் எனவும், அதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.