டெல்லி 32 மண்டலங்களாகப் அண்மையில் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்திருந்தது.
இது தொடர்பாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். சுமார் 9 மணி நேரம் இந்த சிபிஐ விசாரணை நடைபெற்றது.
மேலும் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், "தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா உட்பட சில தொழிலதிபர்கள் கொண்ட சவுத் குரூப் மதுபான குழுமத்திடமிருந்து பெற்ற 100 கோடி ரூபாயின் ஒரு பகுதியை ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்ற தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தி உள்ளது. சேரியாட் புரொடக்ஷன் மீடியா என்ற நிறுவனம் வங்கி மூலமாகவும், ஹவாலா மூலமாகவும் ஆம் ஆத்திக்குப் பணத்தை அனுப்பி உள்ளது" என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.