Published on 06/06/2018 | Edited on 06/06/2018
பாஜக ஒரு தேசிய கட்சி. அந்த கட்சிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைவரும் உண்டு. அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் சர்ச்சையாக பேச ஒரு அமைச்சரோ அல்லது கட்சிக்குள் இருப்பவரோ உண்டு. தமிழகத்துக்கு எச்.ராஜா என்பதை போல உத்திரபிரேதசத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங்.
உத்திரபிரேதசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்தயநாத் இருந்து வருகிறார். சர்ச்சைகள் நிறைந்த இவரது ஆட்சியில் சர்ச்சைக்கு பெயர் போனவரான சுரேந்திர சிங் நேற்று அரசாங்க அலுவலர்களையும், பாலியல் தொழில் செய்பவர்களையும் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நேற்று அவர், "அரசு வேலை பார்ப்பவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவர்களை செருப்பால் அடியுங்கள், குத்துவிட்டு பாடம் புகட்டுங்கள்" என்று முதலில் பேசியிருக்கிறார். இன்னொரு மேடையில், "பாலியல் தொழில் செய்பவர்கள் வாங்கிய காசிற்கு சிறிதாவது வேலை செய்வார்கள். ஆனால், இந்த அரசு அலுவலர்களோ காசை வாங்கிக்கொண்டும் வேலை செய்வதில்லை" என்று கூறினார்.
இவர்தான் இதற்கு முன்பு 2019 மக்களவை தேர்தல் இசுலாமியர்களுக்கும் பகவானுக்கும் இடையே நடக்கும் போர் என்றார். மேற்கு வங்க முதல்வர் மம்தாவை ராவணனின் தங்கை சூர்பனகை என்று பேசி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.