புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதில் காவலர் தேர்வுக்கான வயது வரம்பு 22 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டு காலமாக காவலர் பணியிடங்கள் நிரப்பபடாததால் வயது வரம்பு 24 ஆக நிர்ணயிக்க வேண்டுமென பட்டதாரி இளைஞர்களும், மாணவர் கூட்டமைப்பினரும் வலியுறுத்தியிருந்தனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதனை விசாரித்த மத்திய தீர்ப்பாயம் அரசு கோரிக்கையை பரிசீலனை செய்ய அரசுக்கு பரிந்துரைத்தது.
அதனையடுத்து முதலமைச்சரும், தலைமை செயலாளரும் பரிந்துரைத்துள்ள நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதனைக் கருத்தில் கொள்ளாமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் கையில் திருவோடு ஏந்தி நேரு வீதியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆளுநர் மாளிகை முன் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.