மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை பொதுமக்கள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் என அனைவரும் கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தது மத்திய அரசு. இந்நிலையில் தமிழகத்தின் திமுக கூட்டணி எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மக்களவையில் பேசிய போது புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீதான பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், கல்வியாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரின் கருத்துக்களை மத்திய அரசு மதிப்பதாகவும், அந்த கருத்துக்களை ஏற்று கொண்டு கல்விக்கொள்கையில் மாற்றம் செய்யப்படும் என மக்களவையில் அமைச்சர் உறுதிப்பட தெரிவித்தார். தமிழக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில் மத்திய அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.