புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.
எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.