இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்த பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வு செய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இது பெரும் சர்ச்சையானது. இந்தியாவில் நாடாளுமன்றத்திலும் பெகாசஸ் விவகாரம் எதிரொலித்தது. இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளித்ததோடு, யாரும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெரிவித்தது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாகவும், எந்தெந்த தலைவர்களைக் குறிவைத்து ஒட்டுக் கேட்பு நடைபெற்றுள்ளது என்பது தொடர்பாகவும் காங்கிரஸ் சார்பாக நாளை அனைத்து மாநிலத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமென்றும், பெகாசஸ் குறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி வரும் 22 ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநர் அலுவலகங்கள் முன்பும் காங்கிரஸ் அடையாள போராட்டம் நடத்துமென்றும் கூறப்பட்டுள்ளது.