உலக அளவில் பருவ நிலைமாற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இந்திய எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பனிப்பாறைகள் புவி வெப்பமயமாதல் காரணமாக உருகி வரும் நிலையில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஐநா அமைப்பு உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பருவ நிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆண்டுதோறும் ஐநா சபையில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் தங்களது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் மூலம் பருவநிலை மாற்றங்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறையை வகுத்து, நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஐநா சபை ஈடுபட்டுள்ளது. மரங்கள் இல்லாததும், காற்று மாசுப்பாடு, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள், பல மின்னணு கழிவு பொருட்கள் தேக்கம் உள்ளிட்டவை தான் உலக நாடுகளில் தற்போது உள்ள மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 14–ந் தேதி முதல் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப்படுத்தும் பணியை நேபாள அரசு தொடங்கியது.
மூன்று குழுக்களாக பிரிந்து 2 மாதம் வரை நடந்த எவரெஸ்ட் சிகரத்தை தூய்மை செய்யும் பணி உலக சுற்றுச்சுழல் தினமான நேற்று முடிவடைந்தது. இந்த தூய்மைப்பணி தொடர்பாக நேபாள அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது இந்த குழு. அதில் சிகரத்தில் காலியான ஆக்சிஜன் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேட்டரிகள் உள்பட மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன என அறிக்கையில் தெரிவித்திருப்பதால் சிகரத்தில் சுற்றுச்சூழல் மாசுப்பாடு மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.