மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக - சிவசேனா கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளபோதும், அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. அதிகாரப் பகிர்வில் 50- 50 என்ற முடிவில் சிவசேனா உறுதியாக இருப்பதால் அங்கு அரசு அமைப்பது தாமதமாகி உள்ளது. முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக உள்ளதோடு, அது தொடர்பான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறது.
இந்தநிலையில், மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக பட்னாவிஸ் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், "'பாஜக- சிவசேனா இணைந்தே ஆட்சியமைக்கும். ஏனென்றால் நாம் வாகு கேட்டது மஹாயுதி (பாஜக-சிவசேனா கூட்டணி) க்கு தான். மக்களும் அதற்குத்தான் வாக்களித்துள்ளனர். எனவே மஹாயுதி அரசாங்கம் தான் அமையும் என்பதில் சந்தேகமில்லை" என தெரிவித்துள்ளார்.