டெல்லியில் தீபாவளிக்குப் பிறகிலிருந்தே காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதனாலும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையின் காரணமாகவும், காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைந்ததாலும் அங்கு காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.
இதனையடுத்து மக்கள் தங்களது வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வாகனங்களின் பயன்பாட்டை 30 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை கடந்த சனிக்கிழமை (13.11.2021) விசாரித்த உச்ச நீதிமன்றம், “இரண்டு நாட்கள் ஊரடங்கு போன்று எதையாவது யோசிக்க முடியுமா? அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இரண்டு, மூன்று நாட்களில் காற்று மாசு குறைய வேண்டும்" என தெரிவித்தது.
இதற்கிடையே, டெல்லி காற்று மாசு குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு டெல்லி அரசு, பள்ளிகள், கல்லூரிகள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனங்கள், பிற பயிற்சி நிறுவனங்கள், நூலகங்கள் ஆகியவற்றை நவம்பர் 20 வரை மூட உத்தரவிட்டது.
மேலும், அரசு ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ள டெல்லி அரசு, தனியார் நிறுவன ஊழியர்களையும் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து கட்டுமான பணிகளுக்கும் நவம்பர் 17ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹரியானா மாநிலத்திலும் காற்று மாசுபாடு அதிகரித்ததையடுத்து, தேசிய தலைநகர் பகுதியில் உள்ள நான்கு மாவட்ட பள்ளிகளையும் வரும் புதன்கிழமை வரை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், நவம்பர் 17ஆம் தேதி வரை கட்டுமான பணிகளுக்குத் தடை விதித்துள்ள ஹரியானா அரசு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சாலைகளைப் பெருக்குவதற்கு தடை விதித்துள்ள ஹரியானா அரசு, சாலைகளில் தூசி பறப்பதை கட்டுப்படுத்த தண்ணீர் தெளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் நேற்று (14.11.2021) காற்றின் தரம் சற்று அதிகரித்தது. இருப்பினும் காற்று வீசும் வேகம் குறைவதனால், நாளை இரவு முதல் காற்றின் தரம் மீண்டும் மோசமாகும் என கருதப்படுகிறது. இந்தச் சூழலில் காற்று மாசைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவதற்கான முன்மொழிவை டெல்லி அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது.