
ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலிருந்து பெரும் சத்தத்துடன் விழுந்த மர்மப்பொருளால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், சஞ்சோர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று காலை ஏழு மணியளவில் வானிலிருந்து விண்கல் போன்ற ஒன்று தரையில் விழுந்துள்ளது. மிகுந்த வேகத்தில் வந்து பூமியில் விழுந்த அதன் சத்தம் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு வரை உணரப்பட்டது. இதனையடுத்து சத்தம் வந்த பகுதியை நோக்கி விரைந்து சென்ற மக்கள் அங்கு என்ன இருக்கிறது என்பதனை ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது, சுமார் 2.8 கிலோ எடை கொண்ட கல் போன்ற ஓர் அமைப்பு அங்கு விழுந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலீஸார் மற்றும் சப் டிவிஷனல் நீதிபதி உபேந்திர யாதவ் ஆகியோர் உடனடியாக அந்த இடத்தை அடைந்துள்ளனர். அந்த நேரத்தில் மிகவும் சூடாகவும், கடும் வெப்பத்தையும் உமிழ்ந்து இருந்துள்ளது அந்த கல். இதனையடுத்து சிறிது நேரம் காத்திருந்து, அந்த கல்லின் வெப்பம் குறைந்தவுடன் அதனை அங்கிருந்து ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் ஆய்வகத்தில் நடந்த ஆராய்ச்சியில், அந்த கல்லில் ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல் மற்றும் இரும்பு ஆகியவை கலந்துள்ளதாகவும், இது ஒரு விண்கல்லாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.