இன்று கூடிய நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். 'ஜெய் சம்விதான்' என அரசமைப்பை குறிப்பிட்டு மக்களவையில் தனது உரையை ராகுல் காந்தி தொடங்கிய பொழுது பாஜக உறுப்பினர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ''அரசியலமைப்பை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளது. எனது வீட்டையும் எடுத்துக் கொண்டனர். அரசியல் சாசனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது' என இந்து கடவுள் சிவன் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார். ஆனால் கடவுள் படத்தைக் காட்டியதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, 'மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா? சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல அகிம்சைக்கானது. கடவுள் சிவபெருமானின் படத்தை காங்கிரஸ் கட்சி காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கும். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க்கட்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது. அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல' என்றார். இதனால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி 'கடவுளிடமே நேரடியாக பேசக்கூடியவர் பிரதமர் மோடி, காரணம் அவர்தான் நம்மைப்போல் பயாலஜிக்கலாக பிறக்கவில்லையே. பிரதமர் மோடி ஒன்றும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநி அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பை விதைக்க மாட்டார்கள். ஆனால் பாஜக 24 மணிநேரமும் வெறுப்பைத் தூண்டுகிறது'' என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய ராகுல், ''மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் கூட எனக்கு வணக்கம் தெரிவிப்பதில்லை. அந்த அளவிற்கு பாஜக தலைவர்களைக் கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். அரவணைத்து ஆதரிக்க வேண்டிய விவசாயிகளை தீவிரவாதிகள் எனக் கூறுகின்றனர். திருத்த சட்டம் விவசாயிகளுக்கானது அல்ல அது அம்பானி, அதானிகளுக்கானது. அக்னி வீரர் என்பவர் 'யூஸ் அண்ட் த்ரோ' ஊழியர்கள் போல் நடத்தப்படுகின்றனர். 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. பணம் படைத்தவர்கள் எழுதும் தேர்வாக நீட் மாறியுள்ளது. இதனால் மருத்துவக்கல்வி வியாபார பொருளாகிவிட்டது. அக்னி வீரர் திட்டத்தில் சேர்பவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் ஒருவர் ராணுவத்தில் உயிரிழந்தால் அவருக்கு இழப்பீடும் தரப்படாது. மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் மோசமான சூழ்நிலை உருவானதற்கு பாஜக அரசே காரணம். மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும், அமித்ஷாவும் இதுவரை செல்லாதது ஏன்? கடவுளுடன் தொடர்பில் உள்ள பிரதமர் கடவுளிடம் கேட்டுத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டாரா? குஜராத் தேர்தலில் பாஜகவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
அக்னி வீரர் திட்டம் குறித்து ராகுல் பேசுகையில் இடைமறித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'ராகுல் தவறான விபரத்தை சொல்கிறார். அக்னி வீரர் உயிரிழந்தால் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குகிறது' என்றார். அதேபோல் இந்துக்களை அவமதித்துப் பேசியதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.