டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த எட்டாம் தேதி தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளையும் சேர்த்து 1.46 கோடி வாக்காளர்களுக்கு 13, 750 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு நடைபெற்ற இந்த தேர்தலில் 62.5 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்முறை மும்முனை போட்டியை சந்தித்துள்ள டெல்லி சட்டமன்றம், பல சுவாரசியமான மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து சற்று மாறுபட்ட அரசியல் வரலாற்றை கொண்டது.
1.46 கோடி வாக்காளர்களை கொண்ட டெல்லியில் 40 சதவீதம் வாக்காளர்கள் வெளிமாநிலத்திலிருந்து குடியேறிய மற்ற மாநிலத்தவர் ஆவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956 முதல் 1993 ஆம் ஆண்டுவரை சுமார் 37 ஆண்டுகள் டெல்லியில் முதல்வர் பதவி என்ற ஒன்று கிடையாது.
டிசம்பர் 1998 ஆம் ஆண்டு டெல்லியின் முதல்வராக பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்ஷித் தொடர்ந்து மூன்று முறை (15 ஆண்டுகள்) முதல்வராக இருந்தார். இந்திய வரலாற்றில் ஒரு பெண் முதல்வர் தொடர்ந்து பதவியிலிருந்த அதிகபட்ச ஆண்டுகள் இதுவே ஆகும். அதேபோல இதுவரையிலான இந்திய அரசியல் வரலாற்றில் அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த பெண் என்ற சாதனையையும் ஷீலா தீக்ஷித் படைத்துள்ளார். இவர் மொத்தமாக 5504 நாட்கள் டெல்லியின் முதல்வராக பதவி வகித்துள்ளார்.
டெல்லியை தவிர மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்களும் மக்களவைக்கு தலா ஒரு உறுப்பினரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் டெல்லியில் மட்டும்தான் ஏழு மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
டெல்லியில் இதுவரை ஒரேஒருமுறை மட்டுமே குடியரசுத்தலைவர் ஆட்சி அமைப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மிகக் குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவார். அவர் 2014 ஆம் ஆண்டில் பதவியேற்ற 49 நாட்களில் ராஜினாமா செய்தார். அப்போது டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.