
ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், திருப்பதி ஏழுமலையான கோயிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருந்ததாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு இந்த முடிவு எடுத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதி கோயிலில் இனிமேல் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாவது, “திருப்பதி கோயிலில் இந்துக்கள் பணிபுரிய வேண்டும். கிறிஸ்துவர் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந்தால் அவர்களது உணர்வுகள் புண்படுத்தப்படாமல் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதே போல், தங்கள் நிறுவனங்களில் இந்துகள் பணிபுரியக் கூடாது என்று கிறிஸ்துவ அல்லது முஸ்லிம் நிறுவனங்கள் விருப்பப்பட்டால், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது. அதனை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. கோயில் அமைந்துள்ள மலைகளில் வணிக நோக்கத்துடன் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை. மலை அடிவாரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.27 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும். நாட்டில் ஒவ்வொரு மாநில தலைநகரிலும் வெங்கடேஸ்வர கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதவிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.