Published on 18/01/2019 | Edited on 18/01/2019
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களையும் மீறி சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர். அந்த வகையில் உள்ளே செல்ல முயன்ற பல பெண்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் ஜனவரி 2ம் தேதி பிந்து, கனகதுர்கா என இரு பெண்கள் சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து கோவிலுக்கு சென்ற காரணத்தால் கனகதுர்கா அவரது உறவினர்களாலேயே தாக்கப்பட்டார். இந்நிலையில் அந்த இரு பெண்களும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை இன்று விசாரித்த நீதிபதிகள், கேரளா அரசு அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.