
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை இன்று (22-03-250 நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்புத் தள்ளிவைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் தொகையைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படாமல், ஒன்றிய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘மக்கள் தொகை கட்டுப்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், கடந்த 15 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளில், மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அதன் கணிப்புகள் ஒரே மாதிரியாக இல்லை என்பதைக் காட்டுகிறது. 1971 மற்றும் 2011 க்கு இடையில், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தப் பங்கு இன்னும் குறைந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
தற்போதைய மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டால், நாடாளுமன்றத்தில் எங்களின் பங்கு சந்தேகத்திற்கு இடமின்றி குறையும் என்ற கவலை தென் மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பு நடைமுறை, மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் மட்டுமே இருக்கக் கூடாது. நியாயமான பங்கு மூலம் மட்டுமே, ஒவ்வொரு மாநிலமும் தேசிய கொள்கைகளை வடிவமைப்பதில் தீவிர பங்காற்ற முடியும். வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு, மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ எந்த மாநிலமும் அதன் பிரதிநிதித்துவத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.