டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதற்கான பிரச்சாரங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் அண்மையில் கூறிய கருத்து ஒன்றிற்கு ஆம் ஆத்மீ எம்.பி பதிலடி கொடுதலுள்ளார்.
"டெல்லி தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்" என பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் ட்வீட் செய்திருந்தார். இதற்கு தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய கெஜ்ரிவால், "எங்களது உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. மோடி எங்களுக்கு பிரதமர். பாகிஸ்தான் எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்தியாவின் ஒற்றுமையை ஒன்றும் செய்துவிட முடியாது” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "டெல்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் நம்பவில்லை. அதனால் பாகிஸ்தானில் உள்ள தனது எஜமானர்களிடம் சொல்லி, தனக்கு ஆதரவாக ட்வீட் செய்ய வைக்கிறார்” என்று பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ஆம் ஆத்மீ எம்.பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் சிங், "கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று ஒருவர் கூறுகிறார், அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். உத்தரபிரதேசத்திலிருந்து வந்த இந்த மனப்பிறழ்வு நபரை, அங்குள்ளவர்கள் யோகி பாபா என்று அழைக்கிறார்கள். பதவிக்கு வந்த நாள் முதல், அவர் குப்பைக் கருத்துக்களைக் கூறி வருகிறார். டெல்லியில் நிறைய நல்ல மனநல மருத்துவர்கள் உள்ளனர். அவர்களை வைத்து யோகி ஆதித்யநாத்துக்கு நாம் இலவச சிகிச்சை அளிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.