புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார் கிரண்பேடி. அந்தப் பதவி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.
முதல்வர் நாரயணசாமிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ண ராவ், நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் பதவி விலகினர். இதனால், பெரும்பான்மைக்குத் தேவையான 15 சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமல் காங்கிரஸ் அரசு ஊசலாட்டத்துடன் இருக்கிறது. இந்த நிலையில், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில் ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸிடம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (18/02/2021) புதுச்சேரி துணை நிலை ஆளுநராகப் (பொறுப்பு) பொறுப்பேற்றிருக்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். இதற்கிடையே, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துவருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகையில், புகார் கொடுத்திருப்பதால், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்குப் பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிடுவாரா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றன எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் தமிழிசை ஆலோசித்து வருவதாக புதுவை தகவல்கள் தெரிவிக்கின்றன.