கரோனா பொது முடக்கத்தால் சிறு நிறுவனம் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை வணிக ரீதியாக பலத்த அடி வாங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அதன் தாக்கம் பங்குச்சந்தையில் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில், வங்கிப் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டபோது அதன் பாதிப்பு, பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. யாராலும் பெரிய அளவில் பணத்தைப் புரட்டி டிரேடிங் செய்ய முடியாத நிலை இருந்தது.
ஆனால், மே மாதத்தில் வங்கிப்பணிகளில் தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து, இந்தியப் பங்குச்சந்தைகளும் வேகமெடுத்தன. குறிப்பாக, கடந்த 10 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கின்றன பங்குச்சந்தைகள். மும்பை பங்குச்சந்தை எனப்படும் சென்செக்ஸ், திங்களன்று (ஜூன் 8) 83 புள்ளிகள் உயர்ந்து, இறுதியில் 34,370 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று (ஜூன் 9) எடுத்த எடுப்பிலேயே 35 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொடும் என்ற எதிர்பார்ப்பு டிரேடர்களிடம் நிலவுகிறது.
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 50 முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் கணிசமாக உயர்ந்து, 10,621 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளன. சென்செக்ஸ் சந்தையில் ஜேகே டயர் (12%), ஸ்வான் எனர்ஜி (20%), ஸ்டார் சிமெண்ட் (14%), வோடபோன் ஐடியா (14%), இண்டியாபுல் ஹவுசிங் பைனான்ஸ் (18%), டிஸ்மேன் கார்போஜன் (12%) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தைக் கொடுத்தது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி, தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. திங்களன்று, நிப்டியின் வர்த்தகம் 10,167 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இந்தச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 50 முக்கிய நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலைகள் ஓரளவு அதிகரித்து இருந்தன. 25 நிறுவனங்களின் பங்கு மதிப்பு கணிசமாகச் சரிந்து இருந்தது.
நிப்டியில் கெயில் பங்குகள் அதிகபட்சமாக 7.51 சதவீதம் வரை உயர்ந்து 105.20 ரூபாயில் முடிந்தது. இண்டஸ் இந்த் வங்கி 7.26 சதவீதம், பீ.பி.சி.எல். நிறுவனப் பங்குகளின் விலை 7 சதவீதம், ஆக்சிஸ் வங்கிப் பங்குகள் 6.51 சதவீதம், ஓ.என்.ஜி.சி. பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்தன.
நடப்பு ஜூன் மாதமும் இந்தியப் பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவே இருக்கும் எனத் தரகு நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. அதனால் முதலீட்டாளர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.