இந்திய பங்குச்சந்தையில், புரூக்ஃபீல்டு இண்டியா ரியல் எஸ்டேட் டிரஸ்ட் நிறுவனம் ஐபிஒ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டை புதன்கிழமை (பிப். 03) தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2019ல் எம்பஸி பார்க்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனமும், கடந்த 2020ம் ஆண்டில் பிளாக்ஸ்டோன் குரூப் & மைன்ட் ஸ்பேஸ் பிஸினஸ் பார்க்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனமும் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டை திரட்டின. இவ்விரு நிறுவனங்களைத் தொடர்ந்து பொதுப்பங்கு வெளியீட்டில் கால் பதிக்கும் மூன்றாவது ரியல் எஸ்டேட் நிறுவனம் இதுவாகும்.
நடப்பு 2021ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை ஐஆர்எஃப்சி, இண்டிகோ பெயிண்ட்ஸ், ஹோம் ஃபர்ஸ்ட் பைனான்ஸ், ஸ்டவ் கிராஃப்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து ஐபிஓ வெளியிடும் ஐந்தாவது நிறுவனம் புரூக்ஃபீல்டு இண்டியா ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும்.
தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை ஆகிய இரண்டிலும் இப்பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
ஆம்பிட், ஆக்ஸிஸ் கேபிடல், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ், ஜேஎம் பைனான்சியல், ஜேபி மோர்கன் இண்டியா, கோடக் மஹிந்திரா கேபிடல் கம்பெனி, எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் புரூக்ஃபீல்ட் இண்டியா ஐபிஓவை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் ஐபிஓ விற்பனை பிப். 3ஆம் தேதி தொடங்கி, பிப். 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 275 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஓ மூலமாக இந்நிறுவனம் மொத்தம் 3800 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே துறை சார்ந்த முதலீட்டாளர்களிடம் (ஆன்கர் இன்வெஸ்டார்ஸ்) 1710 கோடி ரூபாய்க்கு ஐபிஓக்களை விற்பனை செய்துள்ளது.
ஒரு லாட் சைஸ் 200 யூனிட்டுகளாகவும், அதன் மடங்காகவும் ஐபிஓவில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 200 யூனிட்டுகளை 55 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டி வரும்.
புரூக்ஃபீல்டு இண்டியா ரியல் எஸ்டேட் டிரஸ்ட் நிறுவனம், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ளது. பிரம்மாண்டமான பரப்பளவில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களைக் கட்டுவதில் நீண்டகால அனுபவம் மிக்கது.
மேலும், இதன் சகோதரி நிறுவனமான புரூக்ஃபீல்டு அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைவு பெற்ற நிறுவனம் ஆகும். உலகளவில் அசெட் மேனேஜ்மெண்டில் சுமார் 575 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி நடவடிக்கைகளைப் பராமரித்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.