சண்டிகரில் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பகவந்த் மான், "சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் காலனியில் வரும் மார்ச் 16- ஆம் தேதி அன்று நண்பகல் 12.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும். பஞ்சாப் மாநிலம் முழுவதில் இருந்தும் பதவியேற்பு விழாவிற்கு மக்கள் வருவார்கள். இதுவரை எடுக்கப்படாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, வெற்றிப் பெற்ற பூரிப்பில் தென் மாநிலங்களில் கட்டமைப்பை வலுப்படுத்தக் களமிறங்குகிறது. தெலங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த ஆம் ஆத்மி கட்சித் திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.